கன்னியாகுமரி:கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் கோயில் தெரு பகுதியைச்சேர்ந்தவர், சுரேஷ்(44). இவருக்கு பிரேமி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
சுரேஷ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் நாட்டில் அந்நாட்டின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் தனியார் உணவகத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி பிரேமி தனியார் மருத்துவமனையில் செவிலியராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் மூன்று குழந்தைகளையும் ஓமன் நாட்டிலேயே படிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கரோனா காரணமாக இவர்கள் இருவரும் வேலையை இழந்துள்ளனர்.
இதனால் குடும்பத்துடன் இந்தியா திரும்ப இருந்த சுரேஷ் தான் 19 ஆண்டுகளாக பணிசெய்த நிறுவனத்தில் தனக்கான பணப்பிடிப்பு (செட்டில்மென்ட் ) தொகையினை கேட்டுள்ளார். அதை கொடுக்க நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் அந்நாட்டின் நீதிமன்றத்தில் சுரேஷ் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதில் அவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இந்தச் சூழ்நிலையில் கரோனா உச்ச கால கட்டத்தில் அங்கிருந்து சொந்த நாடு செல்ல குடும்பத்துடன் விமான நிலையம் வந்த அவரை நிறுவனத்தில் நடைபெற்ற வேறு ஒரு வழக்கில் தொடர்புபடுத்தி, இந்தியா செல்ல ஓமன் நாட்டு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் தனது மூன்று குழந்தைகளை மட்டும் அழைத்துக்கொண்டு சுரேஷின் மனைவி பிரேமி மட்டும் இந்தியா திரும்பினார்.