கன்னியாகுமரி:நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன் இவரது மகன் காசி என்ற சுஜி (26). இவர் இன்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். கல்லூரி படிப்பு முடித்த காசி, தந்தைக்கு உதவியாக கடையில் இருந்து வந்துள்ளார். பெண்கள் பலரை தன் வசீகரமான தோற்றத்தால் கவர்ந்த காசி, அவர்களை காதல் வலையில் வீழ்த்தி நெருங்கி பழகியுள்ளார்.
மேலும் இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பல்வேறு இளம் பெண்களிடம் நெருங்கிப் பழகி அவர்களுடன் நெருக்கமாக இருந்து அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, அவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
இதனையடுத்து சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக ஆன்லைன் மூலம் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு புகார் செய்திருந்தார். இதே போன்று நாகர்கோவில் பகுதிகளிலும் பெண் ஒருவர் புகார் அளித்து இருந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காசியை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான இளம் பெண்களை, முக்கிய பிரமுகர்களின் மனைவி, கல்லூரி மாணவிகள் இவரது வலையில் சிக்கி உள்ளது அம்பலமானது.
இது தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும், கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு போஸ்கோ வழக்கு, ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும், நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், வடசேரி காவல் நிலையத்தில் இரண்டு வழக்கள் என மொத்தம் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் காசி மீது போஸ்கோ, கந்து வட்டி, பாலியல் துன்புறுத்தல், என பல வழக்குகளில் சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தது, காசியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.