கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் தோவாளை, ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர், சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பூக்கள் விற்பனைக்கு பெயர்பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூ விற்பனை முற்றிலும் முடங்கியது.
குமரியில் தொடர்மழை: பூ விற்பனை பாதிப்பு - thovalai flower sellers request
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூ வியாபாரிகள் மழைக்காலங்களில் பூ விற்பனை செய்ய நிரந்தரக் கூடாரம் அமைத்துத் தர கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மேலும் திண்டுக்கல், மதுரை, ராயக்கோட்டை, ஒசூர், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தோவாளை மலர் சந்தைக்கு விற்பனைக்காக வந்த சுமார் ஐந்து டன்னுக்கும் அதிகமான பூக்களும் மழை காரணமாக விற்பனை செய்ய முடியாமல் சந்தையிலேயே தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பூ வியாபாரிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மழையின் காரணமாக தோவாளை மலர் சந்தையில் மல்லிகை 300 ரூபாய், பிச்சி 200 ரூபாய், மஞ்சள் கேந்தி 30 ரூபாய், சிவப்பு கேந்தி 40 ரூபாய், துளசி 20 ரூபாய், தாமரை ஒன்று ஏழு ரூபாய் என அனைத்து ரக பூக்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் தோவாளை மலர் சந்தை வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளார்கள். எனவே, மழைக் காலங்களில் பூக்கள் விற்பனை செய்வதற்காக மலர் சந்தையில் நிரந்தரக் கூடாரம் அமைத்துத் தர பூ வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.