தமிழ்நாட்டில் கடந்த ஒன்பது மாதங்களாக கரோனா வைரஸ் தொற்று ஊரடங்கால் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களைத் திறக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 14ஆம் தேதிமுதல் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதனையடுத்து சுற்றுலாத் தலங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவந்தன. அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியச் சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்பு வராததால், திற்பரப்பு அருவி 14ஆம் தேதி திறக்கப்படவில்லை. இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்நிலையில் குமரி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களான படகு குழாம், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம் போன்ற பகுதிகளில் இன்று (டிச. 15) காலை 7 மணி முதல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவிப்புவிடுத்தார்.
9 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட குமரி குற்றாலம்: சுற்றுலா பயணிகள் வருகை! இதனடிப்படையில் முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி, ஒரு மணி நேரம் மட்டுமே அருவிக்கு உள்ளே அனுமதி போன்ற சுகாதார பாதுகாப்புடனும் கட்டுப்பாடுகள் உடனும் சுற்றுலாப் பயணிகளை திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் உள்ளே அனுமதித்துவருகின்றனர்.
திற்பரப்பு அருவி பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் நடத்தும் இங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க...சென்னை ஐஐடியில் மேலும் 79 பேருக்கு கரோனா உறுதி