தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு: அகில இந்திய அளவில் ஏழாம் இடம் பிடித்த தமிழர் - யுபிஎஸ்சி சர்விஸ் தேர்வு முடிவு வெளியீடு

கன்னியாகுமரி: யுபிஎஸ்சி 2019ஆம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில், இந்திய அளவில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ் குமார் பாஸ்கர் 7ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ganeshkumar
ganeshkumar

By

Published : Aug 4, 2020, 4:04 PM IST

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு, கடந்தாண்டு(2019) செப்டம்பர் மாதம் நடைபெற்றது. பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வும், மார்ச் மாதத்தில் நேர்காணலும் நடைபெற்றது. கரோனா பொது முடக்கம் காரணமாக நேர்காணல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று முடிந்தது.

இதனைத்தொடர்ந்து இன்று(ஆக.4) வெளியான தேர்வு முடிவில், நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் இந்திய அளவில் 7ஆம் இடமும், தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த புன்னை நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். மத்திய அரசின் அமைச்சரவை செயலகத்தில் துணை ஆணையராக உள்ளார்.

வெற்றிபெற்ற மாணவர் கணேஷ்குமார்

இவரது மனைவி லீலாவதி குடும்ப தலைவி. இந்த தம்பதியரின் மூத்த மகன் கணேஷ்குமார் பாஸ்கர் (27). மகள் கிருத்திகா, கோவையில் பொறியியல் படித்து வருகிறார். யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் ஏழாம் இடம் பிடித்த கணேஷ்குமார் கூறியதாவது, "எனது தந்தை பாஸ்கர் மத்திய அரசு ஊழியர் என்பதால், சிறு வயதிலிருந்தே வெவ்வேறு மாநிலங்களில் படித்துள்ளேன்.

மத்திய பாடத் திட்டத்திலேயே 12ஆம் வகுப்பு வரை படித்தேன். 10ஆம் வகுப்பு ஹரியானாவிலும், 12ஆம் வகுப்பு மதுரை கேந்திர வித்யாலயாவில் படித்தேன். பி.டெக் கான்பூரிலும், எம்.பி.ஏ., அகமதாபாத்திலும் முடித்துள்ளேன். பின்னர் அகமதாபாத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். அப்போது இந்தியன் பாரின் சர்வீஸ் பணியில் சேர வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசால் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தேன். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் முயற்சித்து வெற்றி பெற முடியவில்லை. இதனால், எனது வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமாக வீட்டிலிருந்து படிக்க தொடங்கினேன். இதற்கு எனது பெற்றோர் முழு ஆதரவு அளித்தனர்.

யுபிஎஸ்சி தேர்விற்குப் பிரத்யேக பயிற்சி வகுப்பிற்கு எதுவும் செல்லவில்லை. வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் வகுப்பைப் பின்பற்றி மட்டுமே படித்தேன். தேர்வு நடைபெறுவதற்கு 2 மாதத்திற்கு முன்பே தேர்வுக்கு தயாரானேன். நான் 100 இடங்களுக்குள் கிடைக்கும் என்றுதான் நினைத்தேன். இந்திய அளவில் ஏழாம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி இருப்பவர்கள் இத்தேர்வில் வெற்றி பெறலாம்" என்றார்.

இதையும் படிங்க:பாஜக பக்கம் சாயும் திமுக வி.ஐ.பி தொகுதி எம்எல்ஏ!

ABOUT THE AUTHOR

...view details