கன்னியாகுமரி: நாகர்கோவிலின் மையப் பகுதியான கோட்டாறு பகுதியில் வரலாற்று சிறப்புகளைக் கொண்ட கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் உள்ளது. உலகில் புனித சவேரியாருக்கென்று முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையுடன் உள்ள பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளுடன் விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் சாதி, சமய வேறுபாடுகள் இன்றி எல்லா மக்களும் நாடி வரும் பேராலயமாகும்.
சவேரியார் பேராலயத் திருவிழா:அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த பேராலயத்தின் ஆண்டு திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதியில் துவங்கி, 10 நாட்கள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவிழா நேற்று (நவ.24) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆலயத்தில் அர்ச்சிக்கப்பட்ட கொடி, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அமைதி புறாக்கள் பறக்க விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் திருவிழாவின்போதும் திருப்பலி, ஆடம்பர கூட்டு திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன. டிசம்பர் 4ஆம் தேதி திருவிழாவின் முக்கிய அம்சமான தேர் பவனி நடக்கிறது. அன்று, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலயம் உருவான வரலாறு:குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மறை பணியாற்றிய சவேரியார், அடிக்கடி கோட்டாறு வந்து சென்றார். அப்போது திருவிதாங்கூர் அரசு மீது மதுரை மன்னன் படையெடுத்து வந்தான். அதனை சவேரியார் தடுத்து நிறுத்தினார். அதன் பலனாக ஒரு சிறிய ஆலயம் கட்டுவதற்கு நிலத்தையும், பொருட்களையும் சவேரியாருக்கு திருவிதாங்கூர் மன்னர் பரிசாகக் கொடுத்தார்.
அந்த இடத்தில், சவேரியார் தூய ஆரோபண மாதா ஆலயம் ஒன்றை எழுப்பினார். அங்கு அவரே திருப்பலியும் நிறைவேற்றினார். பல இடங்களுக்கும் சென்ற சவேரியார், 1552ஆம் ஆண்டு சீனா அருகேயுள்ள சான்சியான் தீவில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றி வந்த மக்கள் சவேரியாருக்கு கோட்டாறில் ஆலயம் எழுப்ப விரும்பினர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று திருவிதாங்கூர் மகாராஜா கி.பி. 1602-இல் இத்தாலி நாட்டு அருள் பணியாளர் அந்திரேயாஸ் புச்சாரியோவிடம், கோட்டாறில் ஆலயம் கட்ட தேவையான இடத்தை தானமாக வழங்கினார். கி.பி.1603-இல் அருள் பணியாளர் அந்திரேயாஸ் புச்சாரியோ தூய சவேரியார் வழிபாடு நடத்தி ஜெபித்த இடத்தில் களிமண்ணாலும், மரத்தாலும் ஆன மூவொரு இறைவன் ஆலயம் ஒன்றை கட்டினார்.
தூய சவேரியார் மீது கொண்ட பற்றினாலும், பக்தியினாலும் இந்த ஆலயத்தை மக்கள் சவேரியார் கோயில் என்று அழைக்கத் தொடங்கினர்.கி.பி. 1605-இல் மூவொரு இறைவன் ஆலயம் சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கி.பி. 1640-இல் கற்களால் ஆன புதிய ஆலயம் கட்டப்பட்டது. 1643-இல் தூய சவேரியார் மற்றும் தூய இஞ்ஞாசியார் திருப்பண்டங்கள் கோட்டாறு ஆலயத்தில் வைக்கப்பட்டன.
ஸ்பெயின் நாட்டில் பிறந்த சவேரியாருக்கு கோட்டாறில் அமைக்கப்பட்டுள்ள ஆலயமே, உலகில் சவேரியாருக்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இவரது மேலான மன்றாட்டால் பல புதுமைகள் நிகழ்ந்தன. இதனால் சவேரியார் 1622ஆம் ஆண்டு புனிதராக பிரகடனப்படுத்தப்பட்டார். அந்த புனித சவேரியாரால் கட்டப்பட்ட இந்த தேவாயத்திற்கு உள்ளூர் மட்டுமல்ல, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து செல்வது வழக்கம்.
இதையும் படிங்க:ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வேன்.. முற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் - அண்ணாமலை மோதல்!