கன்னியாகுமரி: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலையாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கான வெகுமதியை உயர்த்தி காவல் துறை அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் ஜனவரி 8ஆம் தேதி இரவு பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக மாவட்டத்தின் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபிக் (28) ஆகியோரை காவல் துறை அறிவித்தது.
வில்சனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி
இவர்கள் குறித்த தகவலைக் கொடுப்போருக்கு கேரள காவல் துறையினர் ஏற்கனவே ரூ.5 லட்சம் வெகுமதி வழங்குவதாகவும், தமிழ்நாடு காவல்துறை ரூ.4 லட்சம் வெகுமதி வழங்குவதாகவும் அறிவித்திருந்தது. இச்சூழலில் கொலையாளிகள் குறித்து துப்பு கொடுப்போருக்கான வெகுமதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபிக் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள், மாவட்ட காவல் தனிப்பிரிவிற்கு 04652 220167 என்ற எண்ணிலோ, 7010363173 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே நேற்று கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த ஒருவர் என 3 பேரை கேரளாவில் பிடித்த தனிப்படை காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் 11 பேரை சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.