கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம், நாகர்கோவிலில் உள்ள கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ளது. அங்கு காவல்துறை சார்பில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் ஓய்வெடுக்க கல்லூரி வளாகத்தில் ஓய்வு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீசார் கைகலப்பு; ஆயுதப்படைக்கு மாற்றம்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியின்போது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட இரண்டு போலீசார், ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணகுமார் எனும் காவலர் மதுகுடித்துவிட்டு போதையில் ஓய்வு அறைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த மற்றொரு காவலரோடு திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவரும் ஒருவரைக்கொருவர் சரமாரியாக தாக்கியும், தகாத வார்த்தையில் திட்டியும் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் விசாரணை மேற்கொண்டார். மோதலில் ஈடுபட்ட காவலர் கிருஷ்ணகுமார் உட்பட இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.