கன்னியாகுமரி: களியாக்கவிளை அருகே 6ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் விஷம் கலந்த குளிர்பானத்தைப் பருகிய நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை அடுத்த நுள்ளிக்காடு பகுதியைச்சேர்ந்த வெளிநாட்டில் பிளம்பராக உள்ள சுனில் என்பவரது மகன் ஆறாம் வகுப்பு படிக்கும் அஸ்வின் (11). இவர் அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வரும்நிலையில் கடந்த 24ஆம் தேதி, தேர்வு எழுதிவிட்டு காய்ச்சலுடன் வீடு திரும்பியுள்ளார்.
மாணவனது தாயார் ஷோபியா அவரை களியாக்கவிளையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே அங்கிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரையிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரைப்பரிசோத்த மருத்துவர்கள், மாணவன் அஸ்வின் ஆசிட் தன்மையைக் கொண்ட ஒருவகை திரவத்தை உட்கொண்டதால் அவனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் குமரி மாவட்ட போலீசார் தீவிர விசாரணை இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவன் அஸ்வினின் தாயார் மாணவனிடம் கேட்டபோது, பள்ளியில் தேர்வு நடைபெறும்போது தேர்வு எழுதிவிட்டு கழிவறைக்குச்சென்றுவிட்டு திரும்பும்போது, அப்பள்ளியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத மாணவன் ஒருவன் அளித்த குளிர்பானத்தை குடித்ததாகவும்; அப்போது முதல் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், தான் பயத்தால் வீட்டில் சொல்லவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று (அக்.3) கொடுத்த தகவலின் அடிப்படையில், களியக்காவிளை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் படிப்பில் ஏற்பட்ட போட்டியா? (அ) வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பன உள்ளிட்ட பலகோணங்களின் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாணவன் அஸ்வினுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மாணவனைத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் மாணவருக்கு சக மாணவனின் தாய், விஷம் கொடுத்ததில் பள்ளி மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே, இவ்வாறு குமரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு மாணவனுக்கு அப்பள்ளியில் படிக்கும் சக மாணவன் குளிர்பானத்தில் நச்சுத்தன்மை கொண்ட ஒரு திரவத்தை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரின் கையெழுத்துடன்கூடிய போலி ரசீதைக்கொடுத்து ரூ.1.31 கோடி மோசடி!