கன்னியாகுமரி:திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளையில் ஆந்திரா பதிவு எண் கொண்ட வாகனம் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், கொள்ளையர்கள் மாறுவேடத்தில் தப்பித்து செல்லாம் என்ற கோணத்தில் தமிழ்நாடு கேரளா எல்லை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இரவு பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 4 ஏடிஎம் எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தமிழ்நாடு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு, வாகன சோதனை மற்றும் விடுதிகளில் சோதனையைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில் கொள்ளையர்கள் ஆந்திரா பதிவு எண் கொண்ட வாகனம் பயன்படுத்தியதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் கொள்ளையர்கள் மாறுவேடத்தில் தப்பி செல்லாம் என்ற கோணத்திலும் தமிழ்நாடு கேரளா எல்லை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் நேற்று (பிப்.12) ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளா மார்க்கமாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள், கடற்கரை சாலை, மலைப்பாங்கான சாலைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வழித்தடங்களிலும் இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். வேறு மாநில பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.