கன்னியாகுமரி:நாகர்கோவில், கன்னியாகுமரி, குலசேகரம், மார்த்தாண்டம், களியக்காவிளை பகுதிகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகம்(SETC) மூலமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் சென்னை, பெங்களூர், திருப்பதி, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை, கொடைக்கானல், ஊட்டி, ஓசூர் போன்ற பல்வேறு வழி தடத்தில் இயக்கப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் விரைவு போக்குவரத்து கழகம் என்ற பெயரில் விரைவு பஸ்கள் செயல்பட்டு வந்த காலத்தில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் இந்த பேருந்துகளை நெடுந்தூர பயணத்திற்கு பயன்படுத்தி வந்தனர். பின்னர் காலப்போக்கில் ஆம்னி பஸ் போக்குவரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
இரண்டு ஆம்னி பேருந்துகளுடன் செயல்பட்ட தனியார் பேருந்துகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 200க்கும் மேற்பட்ட பேருந்துகளாக மாறி விட்டன. இது போன்ற பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் சாதாரண நாட்களில் ஆயிரம் முதல் அதிகபட்சமாக பண்டிகை காலங்களில் ஐந்தாயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் கால நேரத்தையும், சொகுசான பயணத்தையும் கருத்தில் கொண்டு இது போன்ற பேருந்துகளில் பயணம் செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் தொலைதூர ஊர்களை சென்றடைந்து வருகின்றனர்.
ஆனால் அந்த அளவிற்கு கட்டணத்தை செலுத்த முடியாத ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இப்போதும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிடும்படியாக சொல்ல வேண்டுமானால், ஆம்னி பேருந்தில் ரூ.2,800 அல்லது ரூ.3,500 செலுத்தி சென்னை செல்பவர்கள் ஒருபுறம் இருக்க, ரூ. 710 மட்டுமே செலுத்தி கால நேரத்தை பற்றி கவலைப்படாமல் வேறு வழியின்றி சென்னை செல்பவர்கள் தான் இந்த ஏழை மக்கள்.
இந்த வகையில் விரைவு ரயில்களில் பயணிக்க பெரும்பாலானோர் ஆர்வமாக இருந்த போதிலும், தினமும் நாகர்கோவிலில் இருந்து நான்கு முதல் ஐந்து ரயில்கள் சென்னை சென்ற போதிலும் பயணிகளுக்கு உரிய நேரத்தில் பயண சீட்டு கிடைக்காத நிலை தான் இன்னமும் நீடித்து வருகிறது. இவர்கள் அனைவருக்கும் கை கொடுப்பது அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் மட்டுமே.
இந்த நிலையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், எவ்வித அறிவிப்பும் இன்றி ஒரு கட்டண உயர்வை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதாவது சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு அல்லது நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட கிழமைகளில் பயணம் செய்தால் ரூ. 100 முதல் ரூ. 150 வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.