கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் 1712ஆம் ஆண்டு பிறந்தவர் நீலம் என்ற தேவசகாயம் பிள்ளை. இவர் நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவ தொண்டுகள் புரிந்துள்ளார். இறுதியில் 1752ஆம் ஆண்டு ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் கிறிஸ்தவ மத நம்பிக்கைகாக தன் இன்னுயிரை தியாகம் செய்தார்.
இவர், கிறிஸ்தவ மதத்திற்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் செய்த அருள் தொண்டுகளைக் கணக்கில்கொண்டு இவருக்கு 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி முக்திப்பேறு பெற்ற அருளாளர் என்று போப் ஆண்டவரால் பட்டம் வழங்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் தேவசகாயம் பிள்ளை அருளாளராக பிரகடனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பிப்ரவரி 21ஆம் தேதி வெள்ளிகிழமையன்று போப் பிரான்சிஸ், புனிதர்களின் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பிச்சுவுடன் கலந்து பேசி மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் வேண்டுததால் நடந்த அற்புதங்களை ஏற்றுக்கொண்டு அவரை புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.