கன்னியாகுமரி மாவட்டம் மொட்டவிலை பகுதியை சேர்ந்த சுரேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "எங்களது ஊரில் 300 குடும்பங்கள் 1500 மக்கள் உள்ளனர். எங்களது ஊரில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மரவள்ளிக் கிழங்கு, கத்திரிக்காய், மிளகாய், தேங்காய், கீரை மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றனர்.விவசாயம் செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் மொட்டைவிலை சந்தையில் தினந்தோறும் காலை 10.30 மணி முதல் 11.30 மணிவரை விவசாயிகள் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
70 ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. சந்தை முடிந்தவுடன் 14 தூய்மைப் பணியாளர்களை வைத்து சந்தையை சுத்தப்படுத்தி அங்கு உள்ள பொருள்கள் அனைத்தும் அப்புறப்படுத்தி முறையான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. கிராமத்தில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் மொட்டைவிலை என்ற பெயரை பேரின்பம் என்ற பெயராக மாற்றுவதற்கு இரண்டு பிரிவினர் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.