தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரி மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்... பயிற்சி மாணவர்களிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை! - Kulasekaram Police

Kanyakumari Medical College Student suicide issue: கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு தொடர்பாக, பயிற்சி மாணவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்
கன்னியாகுமரி மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 12:16 PM IST

கன்னியாகுமரி: தூத்துக்குடியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மயக்கவியல் மருத்துவம் 2ஆம் ஆண்டு, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி, அந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது விடுதியில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், பயிற்சி மாணவர் ஒருவரும், பயிற்சி மாணவி ஒருவரும் தன்னை மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் மீது போலீசார் தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி பேராசிரியரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். அதன் பிறகு வழக்கானது நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி ஆகியோர் விசாரணையைத் தொடங்கினர். அதனை அடுத்து, நீதிமன்ற காவலில் இருந்த பேராசிரியரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவருக்கு ஆண்மை பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பயிற்சி மாணவர், பயிற்சி மாணவி இருவரையும் பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நடவடிக்கை மேற் கொண்டனர். இருவரும் முன்ஜாமீன் பெற்ற நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். இதனை அடுத்து பயிற்சி மாணவர்கள் இருவரும், நாகர்கோவில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

இரண்டு நாள் விசாரணைக்கு ஆஜரான பயிற்சி மாணவரிடம், தர்கொலை செய்து கொண்ட மாணவி, எதற்காக உங்களது பெயரை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இருவரும் கூறிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்து, மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராகுமாறு அவர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க:"உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் மாநாடு நடத்த முடிவு" - கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details