கன்னியாகுமரி:தூத்துக்குடியைச் சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மயக்கவியல் மருத்துவம் 2ஆம் ஆண்டு, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அம்மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் கல்லூரி பேராசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 13ஆம் தேதி பேராசிரியரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் கல்லூரிக்குச் சென்று மாணவி தங்கி இருந்த அறையிலும் ஆய்வு மேற்கொண்டனர். தற்கொலை செய்து
கொண்ட மாணவியின் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் சிலரிடமும், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.