கன்னியாகுமரி மாவட்டம், பொன்மனை அருகே முல்லைசேரிவிளை பகுதியைச் சேர்ந்தவர், சசிகுமார். பால்வடிக்கும் தொழிலாளி. இவரது மகன் அஜித்(22). ஐடிஐ முடித்து மினி லாரியில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குலசேகரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இரண்டு மாதம் சிறையிலிருந்த பின் ஜாமீனில் வெளிவந்த அஜித், குலசேகரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். கடந்த 23ஆம் தேதி கையெழுத்து போடுவதற்கு குலசேகரம் காவல் நிலையம் சென்ற இளைஞர் அஜித் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் குலசேகரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் சோனல் பிரதீப், இளைஞர் அஜித்தின் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோரை மிரட்டியுள்ளார்.
அதைத்தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அஜித்தின் வீட்டிற்குச்சென்று மிரட்டி பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று, அதன் பிறகு அவர் விஷம் அருந்தி மருத்துவமனையில் உள்ளதாக தகவலைக் கூறி, அஜித்தைப் பார்க்க, அவரது தந்தை சசிகுமாரை அழைத்துச்சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனது மகனின் உயிரிழப்பிற்கு குலசேகரம் காவல் துறையினரே காரணம் எனக் கூறி அஜித்தின் தந்தை சசிகுமார் உடலை பெற மறுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்ற இளைஞர் மர்ம மரணம் சமீப காலமாக குலசேகரம் காவல் நிலையத்தில் பொய்வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுவந்த நிலையில் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடசென்ற இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அமைச்சர்களிடம் பேசி அரசு வேலை தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது