முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கரச்சாலை அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் மதுரை - கன்னியாகுமரி வழித்தடத்தில், குமரி மாவட்டம் நரிக்குளம் அருகே சாலையில் பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலத்தை கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்குப் பின் இந்தப் பாலத்தில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு, பாலம் பல சர்ச்சைகளில் சிக்கிவருகிறது.
இப்பாலம் உள்ள சாலையின் இருபுறத்திலும் வரிசையாக மின் விளக்குகள் இருந்தாலும், அவை எரியாமல்தான் உள்ளன எனக் கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்வோர் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்தப் பாலம் சர்வதேச சுற்றுலாத்தளமான கன்னியாகுமரிக்கு மிக அருகிலிருப்பதால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளும் வாகன ஓட்டிகளும் இவ்வழியாக அதிகமாக பயன்படுத்திவருகின்றனர். இந்த நாற்கரச்சாலையில் வளைவான பகுதிகள் இருப்பதால் வேகமாக வரும் வாகனங்கள் வெளிச்சம் தெரியாமல் நடுவில் உள்ள சாலைத் தடுப்புகளில் இடித்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.