கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த காரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தனிஷ். இவர் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார். கரோனா ஊரடங்கு காரணமாக தனிஷ் ஹைதாராபாத்தில் இருந்து சொந்த ஊருக்கு வர முடிவு செய்துள்ளார்.
இதற்கான உரிய ஆவணங்களை ஆன்லைனில் பெற்றுக்கொண்டு நேற்று (ஜூன் 15) காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு விமான நிலைய அலுவலர்கள் அவரது ஆவணங்களை சோதனையிட்டனர். பின்னர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, மதியம் அவரை குமரி - கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் விட்டுச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தனிஷ் அங்கிருந்த மாவட்ட அலுவலர்களிடம் தனது ஆவணங்களைக் காட்டி சொந்த ஊர் செல்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் அங்கு இருந்தவர்கள் யாரும் இவரைக் கண்டுகொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து, வேறு வழியின்றி களியக்காவிளையில் இருந்து குமரி நோக்கி நடக்கத் தொடங்கிய தனிஷ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குச் சென்று, தனது நிலையைக் கூறி தனக்கு கரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டுள்ளார்.