கன்னியா குமரி: திமுகவைச் சேர்ந்த கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆஸ்டின் தனது தொகுதிக்கு உட்பட்ட இலந்தையடிதட்டு அம்மன் கோயிலில் இருந்து நடைபயணமாக சென்று மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை தொடங்கினார். இலந்தையடிதட்டு, வைகுண்டபதி, காற்றாடி தட்டு, கேசவன்புதூர், நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் கோரிக்கைகளை பெற்றுக் கொண்டார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த நான்கரை ஆண்டுகளில் தன்னுடைய 75% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். தொகுதி முழுவதும் ரூ. 500 கோடி மதிப்பிலான பணிகளை நிறைவேற்றியுள்ளேன். சில பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் வருவதற்கு முன்பாகவே, அவரிடம் அளித்த 95 கோரிக்கைகளில் முதல் கோரிக்கை அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டம் தான்.
2016ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கி முடிவடைந்து விட்டாலும், மின்சாரம் வழங்காததால் இன்னமும் அவை செயல்பாட்டிற்கு வரவில்லை. அவற்றை விரைந்து முடிக்க தற்போது வலியுறுத்தி வருகிறேன்.
மக்களிடம் கலந்துரையாடுவதற்காக இன்று முதல் மக்களை சந்திக்க பயணத்தை தொடங்கியுள்ளேன். இதன்படி காலை 7 மணிக்கு ஒவ்வொரு பகுதியிலும் சட்டப்பேரவை உறுப்பினருடன் தேநீர் என்ற அடிப்படையில் தேநீர் கடைகளில் தேநீர் அருந்திக் கொண்டே மக்கள் குறைகளை கேட்கிறேன்.