கன்னியாகுமரி:கோடை காலம் என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுபோன்ற பஞ்ச நிலை ஏற்படுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததே காரணம் என பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், காட்டாத்துறை பகுதியில் இருந்து இரணியல் பகுதிக்கு, இரணியல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சாலையோரம் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கோழிப்போர்விளை அருகே அமராவதி குளத்தின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த இரும்பு ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில், குடிநீர் திடீர் நீரூற்று போல கொட்டத் துவங்கியது. இதனால், சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் வரை தண்ணீர் மிகுந்த அழுத்தத்துடன் பீய்ச்சி அடித்ததால், சாலையில் கடந்து செல்லும் வாகனங்கள் மீது சர்வீஸ் ஸ்டேசன் போல, தண்ணீர் பீச்சியடித்து இலவச வாட்டர் சர்வீஸ் செய்தது போன்று காட்சியளித்தது.