கன்னியாகுமரி:தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாலியல் ரீதியான தொந்தரவுகள், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் ஆங்காங்கே ஒரு புறம் நடைபெற்று கொண்டிருக்க சைபர் கிரைம் குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த, காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்குப் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.
இவை குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பெண்களைக் குறிவைத்து ஆன்லைன் மூலமாக பெரும் கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. மோசடியில் ஈடுபடுபவர்களை கண்டறிவதும் அவர்களைக் கைது செய்வதும் காவல் துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு, ஒரு செல்போன் எண்ணிலிருந்து வாட்ஸ் அப் வழியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். அவர், ஒரு கட்டத்தில் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவதும், பின்னர் இணையதளத்தில் அப்பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை பரப்பிவிடுவதாக கூறி மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளார்.
உடனடியாக அப்பெண், இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்திடம் நேரடியாக புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்டதும் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.