கன்னியாகுமரி :இந்தியத் திரைப்படத்துறையில் சண்டைப் பயிற்சியாளராகவும் நடிகராகவும் இருந்து வருபவர், கனல் கண்ணன். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் இந்து முன்னணியின் மாநில கலை இலக்கியச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள திட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆஸ்டின் பெனட் என்பவர், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அந்தப் புகாரில், "சமூக வலைதளம் ஒன்றில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநிலத் தலைவரும், சினிமா ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், வெளிநாட்டு மத கலாசாரத்தின் நிலை இதுதான்' எனக் குறிப்பிட்டு, கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பெண்ணுடன் ஆடுவது போன்ற காட்சியை தமிழ் திரைப்படப் பாடலுடன் எடிட் செய்து பதிவிட்டுள்ளார். இது ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களையும் அவமதிக்கும் செயல் எனப் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனையடுத்து நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 (ஏ), 562 (ii) ஆகியப் பிரிவு இடங்களில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர் இதற்கு முன்பு சென்னை மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயண நிறைவு பொதுக் கூட்டதில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை என்று சொன்ன ஈ.வெ.ராவின் சிலை இருப்பதாகவும், அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அளித்தப் புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில் கிறிஸ்தவ மத போதகரை அவமதிக்கும் விதத்தில் இவரிட்ட சமூக வலைதளப் பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:2 சிறுமிகள் உள்பட மூன்று பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு - 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் கைது!