கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் இன்று சூறைக்காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் அலைகள் அதிகமாக உள்ளதால், பல அடி உயரத்திற்கும் மேலாக அலைகள் எழுந்து விழுகிறது. மேலும் அதிகாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை கடல் பகுதியிலும் இதே நிலை நீடித்து வருவதால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் படகு போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது என பூம்புகார் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் கடலில் கவனமாக குளிக்குமாறு காவல் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த உள்ளூர், வெளி நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் மூலமாகச் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.