108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குவது, குமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலாகும். சுமார் ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் 22 அடி நீளத்தில் பெருமாள் அனந்தசயன சிலையுள்ளது.
திருவட்டாறு பெருமாள் சிலையில் நடந்த தங்கச் சுரண்டல் - 16 பேருக்கு சிறைதண்டனை! - ஆதிகேசவ பெருமாள் கோயில் திருட்டு வழக்கில் 16 பேருக்கு சிறைதண்டனை
நாகர்கோவில்: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருட்டு சம்பவம் தொடர்பான வழக்கு, 27 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், தற்போது அந்த வழக்கில் 16 பேருக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த கோயிலில், 1974ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை அதாவது பத்தாண்டுகளாக பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் சிறிது சிறிதாக சுரண்டப்பட்டு வந்தது. இதன் அப்போதைய மதிப்பு சுமார் ரூ. 1 கோடியாகும். இந்நிலையில், கடந்த 1992ஆம் ஆண்டு, இத்திருட்டு குறித்து தெரிய வந்தது. இது தொடர்பாக திருவட்டாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 34 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் பத்து பேர் வயது முதுமை காரணமாகவும், சிலர் தற்கொலை செய்தும் உயிரிழந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டதில் தற்போது 24 பேர் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கிறிஸ்டியன் முன் விசாரணைக்கு வந்தது. அதில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீஅப்பன், கோபாலகிருஷ்ணன், கோபிநாதன், அப்புக்குட்டன், கிருஷ்ணம்மாள், குமார், முத்துகுமார், சுரேந்திரன், சுப்பிரமணியர், அய்யப்பன் ஆசாரி, ஆறுமுகம் ஆசாரி, அப்பாவு உள்ளிட்ட 16 பேருக்கு தலா ஆறாண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், கோபிநாதன்நாயருக்கு ரூ.3 லட்சத்து 70 ஆயிரமும், கோபாலகிருஷ்ணனுக்கு ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும், மற்றவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.