கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹோமர்லால். இவர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நாகர்கோவிலில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவலர்கள் அதிரடியாக நுழைந்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதுடன், வெளியிலிருந்து தனிநபர்களை அழைத்து வந்து வழக்குகளுக்காகப் பயன்படுத்தினர்.
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு காவலர்களுக்கு வழக்கமாக கொடுக்கும் மாமூலை குறைத்துக் கொடுத்ததால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் பொய் வழக்கு போட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நாகர்கோவிலில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவலர்களுக்கு மாமூலாக 40 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளனர்.