கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (39). சமையல் வேலை பார்க்கும் இவருக்கு திருமணமாகி பத்தாண்டு ஆகிறது. இவருக்கு ப்ரீத்தி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக 2017ஆம் ஆண்டு சமையல் வேலைக்காக துபாய் சென்றார். வெளிநாடு சென்று இரண்டு ஆண்டு ஆகிவிட்ட நிலையில் ரமேஷ்குமார் சமீபத்தில் வீடு திரும்பினார்.
குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அப்போது, தனது இரண்டு குழந்தைகளையும் பூட்டி வைத்துவிட்டு ப்ரீத்தி வெளியே சென்றது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் இரவு வீடு திரும்பிய ப்ரீத்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ரமேஷ் வெளிநாட்டில் இருந்தபோது ப்ரீத்திக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த அகில் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ப்ரீத்தி ரமேஷ்குமாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு அகிலுடன் திடீரென மாயமானார். காணாமல்போன ப்ரீத்தி அகிலை அக்டோபர் 28ஆம் தேதி சர்ச்சில் திருமணம் செய்துகொண்டு இருவரும் ஒன்றாக வசித்துவந்துள்ளனர். இந்தத் தகவல் ரமேஷ்குமாருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக தக்கலை காவல் நிலையத்தில் ரமேஷ்குமார், தொலைந்துபோன மனைவியை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தார்.
தாய் பாச்ததிற்காக ஏங்கும் குழந்தைகள் இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் ப்ரீத்தியை தேடி கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ப்ரீத்தி, ரமேஷ்குமாருடன் வாழ விருப்பம் இல்லை. எனக்கு நடந்தது திருமணமே இல்லை. அகிலுடன் நடந்ததுதான் உண்மையான திருமணம் எனக் கூறி காவல் துறையினரை மிரளவைத்தார்.
இது குறித்து மேலும் அவர், "எனது பெயர் ப்ரீத்தி, என் தாயார் பெயர் சிந்து. நான் முறையாக எனது கணவரை திருமணம் செய்யவில்லை. திருமணம் செய்து தரும்பொழுது எனக்கு வயது 15தான். அப்போது எனக்கு எதுவும் தெரியாது. பார்ப்பதற்கு நானும் என் தாயாரும் அக்கா தங்கை போன்று இருப்போம். இதனால், என் தாயார் அவரது பிறப்புச் சான்றிதழை காண்பித்து என்னை ரமேஷ்குமாருக்கு திருமணம் செய்துவைத்தார்.
மனைவிக்காக காத்திருக்கும் ரமேஷ் எனவே அந்தத் திருமணம் செல்லாது. ரமேஷ்குமாருடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பமில்லை. அவருடன் வாழ்ந்து இரண்டு குழந்தைக்கு தாய் ஆனாலும் அகிலுடன் செய்துகொண்ட திருமணம்தான் சட்டப்படிச் செல்லும். இதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதனைக்கேட்ட காவல் துறையினர் சற்று ஆடித்தான் போனார்கள்.மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தற்போது இரண்டு குழந்தைகளும் அம்மா வேண்டும் என்று கூறுவது பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.