சித்திரை தெப்பத் திருவிழா தொடக்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா இன்று ( ஏப்.21 ) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில் எதிர்வரும் 29ஆம் தேதி தேரோட்டமும் 30ஆம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. குமரி மாவட்டம், மட்டுமின்றி கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
தமிழ்நாட்டில் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கோயில்களில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலும் ஒன்று. இந்த கோயிலைப் பொறுத்தவரை குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்கள் வந்து செல்லும் ஒரு முக்கிய கோயிலாக அமைந்துள்ளது.
அத்திரி முனிவரும், அவருடைய மனைவியும் கற்புக்கரசி அனுசுயாதேவியும் சுசீந்திரத்தில் தவம் செய்தனர். அத்திரி முனிவர் தவம் முடிந்து இமயமலைக்குச் சென்றார். அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று பேரும் அனுசுயா தேவியின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து பசிக்கு உணவு தருமாறு கேட்டுள்ளனர். அனுசுயா தேவி, உணவு படைக்கத் தொடங்கிய போது மூவரும் ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்பட்டால் உணவு உண்ண முடியாது என்று கூறியுள்ளனர். இதைக்கேட்டு திடுக்கிட்ட அனுசுயா தேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை, மூவர் மீதும் தெளித்துள்ளார்.
சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று பேரும் பச்சிளம் குழந்தைகளாக மாறியுள்ளனர். பின்பு அந்தப் பச்சிளம் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து தொட்டில் தாலாட்டி தூங்க வைத்துள்ளார். இதனை அறிந்த மூவரின் மனைவியரும் அங்கு சென்று அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய நிலைக்கு மாற்றித் தர வேண்டியுள்ளனர். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கு பழைய உருவத்தை கொடுத்துள்ளார்.
அந்த நேரம் திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசுயா உடன் சேர்ந்து மும்மூர்த்திகளின் காட்சியைக் கண்டு அருள் பெற்றனர். இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்த, சுசீந்திரம் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அத்திரி முனிவரும் அனுசுயா தேவியும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தின் அடியில் நின்று வேண்டிய போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்துள்ளனர். இதனைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளி உள்ளனர்.
சிவன் (தாணு) , விஷ்ணு (மால்) , பிரம்மா (அயன்) ஆகிய முப்பெரும் கடவுள்களும் சேர்ந்துள்ள இந்த தல மூர்த்தி தாணுமாலயன் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தினசரி வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் சித்திரை தெப்பத்திருவிழா, ஆவணி பெருநாள் திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா, மாசி திருக்கல்யாண திருவிழா என வருடம் முழுவதும் திருவிழா நடைபெற்று வரும் அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா இன்று (ஏப்.21) கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக காலை திருமுறை பாராயணம் உள்ளிட்ட சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கோயில் தந்திரிகள் கொடியேற்றம் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. மாலை சிறப்பு அலங்கார தீபாராதனைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறவுள்ளன.
விழா நடைபெறும் பத்து நாட்களிலும் காலையில் சாமி வாகன பவனி, இரவு வாகன வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருவிழாவில் ஒன்பதாவது நாளான எதிர்வரும் வரும் 29ஆம் தேதி தேரோட்டம் நடைபெருகிறது. நிறைவு விழாவான பத்தாவது நாள் இரவு 8 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திற்கு சாமி, அம்பாள், பெருமாள், எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறும் மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். அன்று இரவே ஆராட்டு நிகழ்ச்சியோடு சித்திரை தெப்பத் திருவிழா நிறைவுபெறும். மேலும் கொடியேற்று நிகழ்ச்சியை முன்னிட்டு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
இதையும் படிங்க:'மீனாட்சிய பார்க்க அழகர் வாராரு... மருதைக்கு வாங்க மக்களே...' - சித்திரைத் திருவிழாவுக்கு தயாராகும் மாமதுரை!