தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 20, 2020, 9:19 PM IST

ETV Bharat / state

பெண்ணிடம் செயின் பறிப்பு: ஒரே நாளில் குற்றவாளிகளை பிடித்த காவலர்களுக்கு பாராட்டு!

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே பெண்ணிடம் செயின் பறித்துச் சென்ற இளைஞர்களை, காவல் துறையினர் 24 மணி நேரத்தில் பிடித்துள்ளனர்.

பெண்ணிடம் செயின் பறிப்பு: 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவலர்களுக்கு பாராட்டு!
Police arrested Chain snatcher in kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி லட்சுமி தங்கம் (49). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்காக தனது மகளுடன் ஆகஸ்ட் 18ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வாகனத்தை அவரது மகள் ஓட்டிச் சென்றார்.

அப்போது, புன்னார்குளம் அருகில் சென்று கொண்டிருந்தபோது இவர்களது வாகனத்தை பின்தொடர்ந்து வந்த இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், லட்சுமி தங்கத்தின் வாகனத்தை இடித்து தள்ளினர். பின்னர், அவர்கள் லட்சுமியின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச் தாலியை அறுத்துவிட்ட மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதில் லட்சுமிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டு நாகர்கோவிலிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

அதன்படி நேற்று (ஆக.19) இரவு மயிலாடி அடுத்த கூண்டு பாலம் பகுதியில் காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் தலைமையில் அஞ்சுகிராமம் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை பிடித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், இவர்கள் இருவரும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஒருவர் நெல்லை மாவட்டம் பட்டார் குளம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (22) என்பதும், மற்றொருவர் நெல்லை மாவட்டம் வைராவி கிணறு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (22) என்பதும் தெரியவந்தது. இருவரும் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மீது பழவூர் காவல் நிலையம், சுசீந்திரம் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details