கரோனாவைத் தடுக்க தகுந்த இடைவெளி மட்டும் போதாது தனிமனித ஒழுக்கமும் தேவைப்படுகிறது. தனிமனித ஒழுக்கத்தால் கரோனாவை ஒழித்துவிட முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால், கரோனா போன்ற பெருந்தொற்றை ஒழிக்க மக்களும் அரசுடன் ஒத்துழைத்தால் மட்டுமே அதனைக் கட்டுப்படுத்த முடியும். தனிமனித ஒழுங்கு இல்லாமல் எதையும் கடந்துபோவது கடினம்தான்.
முகக்கவசம், அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது, கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, தகுந்த இடைவெளி இதனைக் காட்டிலும், எச்சிலை கண்ட இடத்தில் துப்புவதை தவிர்ப்பது மனித ஒழுக்கத்தை கடைப்படிப்பதேயாகும். நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள் என்று யாரும் எச்சரிக்கவில்லை என்று அறிவுப்பூர்வமாக கேட்பதை தவிர்க்கலாம். பொது இடத்தில் எச்சில் துப்புவது பேராபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கரோனா காலத்தில் மட்டுமல்ல, பொதுமுடக்கம் முடிந்து இயல்பு நிலைக்கு வந்தாலும் எச்சில் துப்புவது ஆபத்துதான். 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், பொது இடங்களில் எச்சில் துப்புவது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதைவிட பெரிய கூத்துகள் பேருந்துகளில்தான் அதிகமாக நிகழும். வாய் சிவக்க வெத்தலையை மென்று தின்று, பேருந்து ஜன்னல் வழியாக சாலையில் செல்வோர் மீது எச்சிலை துப்பி கரைப்படுத்துவது அநாகரிகமாக இருக்கும். தற்போது, பான் பராக், குட்கா போன்றவற்றைத் துப்புவது என்று மாறிவிட்டது. காலம் மாறிவிட்டதே தவிர பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது என்பதை யாரும் உணரவில்லை என்பதே நிதர்சனம்.
19ஆம் நூற்றாண்டிடு முதல் உலக நாடுகள் அனைத்தும் பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதமும், அதற்கு தடையும் விதித்துவருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள், காசநோய் அச்சம் காரணமாக பொதுவெளியில் எச்சில் துப்புவதை தடை செய்துள்ளன. காசநோயின் அச்சம் கடந்தபோதும், பொது இடத்தில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தேநீர் கடைகள், சாலையோரங்கள், சந்தைகள், மக்கள் செல்லும் பொது இடங்களில் கூடும் மக்கள் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
அதபோன்று பிரிட்டனில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பான் மசாலா போன்ற போதை பாக்குகளை உமிழ்ந்து பொது இடத்தில் துப்புவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் கடும் எச்சரிக்கையுடன் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். வியப்பாகவும் பார்க்கலாம், ஏன் இந்தியாவில் இதுபோன்ற சட்டங்கள் என்ற கேள்வியும் சிலருக்கு எழக்கூடும். இந்தியாவில் எச்சில் துப்புவதற்கு தடைகள் இருந்தாலும் அவை பெயரளவில் கடைப்பிடிக்கப்படுவதுதான் கேலிக்கூத்தாக உள்ளது. இந்தியாவில் 1997ஆம் ஆண்டு புகைப்பிடித்தல் மற்று பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடைவிதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், பிகார், கேரளா போன்ற மாநிலங்களில் இவை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டில் 2002ஆம் ஆண்டு பொது இடத்தில் எச்சில் துப்புதல், புகைப்பிடிப்பதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சளியால் அவதிப்படுவார். சளி இருந்தால் கூடவே இருமலும் இருக்கும். இருமலோடு பொது இடத்தில் துப்ப அதிக வாய்ப்புள்ளது. எனவே அவர் துப்பும் எச்சிலால் கரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது.