கன்னியாகுமரி:நாகர்கோவில் கோணம் பகுதியில் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான குடோன் உள்ளது. மத்திய அரசு மூலமாகவும், மாநில அரசு மூலமாகவும் அனுப்பப்பட்டு வரும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் ரயில் மூலமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து லாரிகள் மூலமாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் நுகர்வோர் வாணிபக் கழகங்களுக்கு எடுத்து வரப்படுகிறது.
இவ்வாறு எடுத்து வரப்படும் மூட்டைகளை ஏற்றுவதற்கு அரசிடம் இருந்து ஒரு கூலி, இறக்குவதற்கு ஒரு கூலி மற்றும் லோடு கொண்டு வரும் லாரி ஒப்பந்தக்காரரிடம் இருந்து ஒரு கூலி, லோடு ஏற்றிச் செல்லும் லாரி ஒப்பந்தக்காரரிடம் இருந்து ஒரு கூலி என நான்கு விதமான கூலிகளை ஊழியர்கள் பெற்று வருகின்றனர்.
லாரிகளில் கொண்டு வரப்படும் அரிசி, பருப்பு, சீனி, பாமாயில், கோதுமை போன்ற பொருட்களை குடோனில் இறக்கி வைத்து விட்டு, அங்கு ஏற்கனவே இருப்பு இருக்கும் பொருட்களை ரேசன் கடைகளுக்கு லாரியில் ஏற்றி விட வேண்டும்.
ஆனால், பாரம் ஏற்றி இறக்குவோர் தங்களது சுயநலத்திற்காக லாரிகளில் வரும் மூட்டைகளை குடோனில் இறக்குவதற்குப் பதிலாக, அந்த மூட்டைகளை அப்படியே மற்றொரு லாரியில் ஏற்றி அதனை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி விடுகின்றனர்.
இதனால், குடோனில் இருப்பு வைக்கப்பட்ட அரிசி அப்படியே உள்ளதாகவும், அந்த வகையில் சுமார் 50 முதல் 60 டன் ரேஷன் அரிசிகள் கெட்டுப் போன நிலையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது என குடோன் ஊழியர்கள் நுகர்வோர் அமைப்பிற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் படி, நாகர்கோவிலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜான் விக்டர் தாஸ் புகார் அறிக்கை வெளியிட்டு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் கன்னியாகுமரி மண்டலம் கோணம்-1 மற்றும் கோணம் -2 ஒழுங்குமுறை குடோன் சென்று ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.
அந்த ஆய்வில், அங்குக் குறிப்பிடப்பட்டிருந்த அளவிற்கு மேலாகப் பல மடங்கு அரிசி கிடப்பிலிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்தும் பெறப்பட்ட 517.449 டன் பழுப்பு நிற மிகை அரிசி இருப்பில் இருப்பதைக் கண்டு துறை அலுவலர்களுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
குடோனில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள பழுப்பு நிற மிகை அரிசியானது மனிதர்கள் பயன்படுத்த முடியாத அளவிற்குக் கெட்டுப் போனதால், உடனடியாக டெண்டர் விட்டு காலி செய்ய, மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாகர்கோவில் ஒழுங்குமுறை குடோனில் கிடப்பிலிருந்த 1400 டன் அரிசியை ஆன்லைன் மூலமாக டெண்டர் விட்டு ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த அரிசியைச் சாராய ஆலை வைத்திருப்பவர்கள் மட்டுமே கொள்முதல் செய்து அதனை ஸ்பிரிட் அல்லது மதுபானங்கள் தயாரிக்க முடியும் என்பதால், வேறு யாரும் ஏலத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்றும், 1400 டன் அரிசி கிடப்பிலிருந்ததற்கு காரணமாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு..! இரண்டு நாள் பயணமாக நாளை சென்னை வரும் மத்திய குழு..!