நிவர் புயல் எதிரொலியாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
"நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு கடற்பகுதிகளில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, குமரி மாவட்டத்தில் கடலோரப் பகுதியைச் சேர்ந்த அனைத்து நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும் .மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள் .இதனை தங்களது மீனவ கிராமத்தில் சம்பந்தப்பட்ட மீனவர்கள் அறிந்திடும் வண்ணம் பொது அறிவிப்பு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டைநோக்கி புயல் வரும் நிலையில் பொதுமக்கள் தங்களது அடையாள ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். .குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரகால மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்துகளை தயாராக வைத்திருத்தல் அவசியம். காற்றை சமாளித்து எரியும் விளக்குகள் வைத்துக்கொள்ளுங்கள். மேலும் பேட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டுகள் போதுமான பேட்டரிகள் ,பேரீச்சை ,திராட்சை போன்ற உலர்ந்த பழ வகைகள், வறுத்த வேர்க்கடலை மற்றும் மெழுகுவர்த்தி ,தீப்பெட்டி, மண்ணெண்ணை ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
இது மட்டுமல்லாது அடையாள ஆவணங்கள், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை ,வாக்காளர் அட்டை ,வங்கி கணக்கு புத்தகங்கள், கல்விச் சான்றிதழ் ,சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை நீர் படாத வகையில் பிளாஸ்டிக் உரைகளை கொண்டு பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும். புயல் வருவதற்கு முன்பு வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுதுபார்த்து வைத்துக்கொள்ளுங்கள். வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள் விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை அகற்றி விடுங்கள். புயல் கரையை கடக்கும்போது குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்து அதன்படி செயல்பட வேண்டும்.