கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்துவருகின்றனர். இங்குள்ள மீனவர்கள் அதிகாலை ஐந்து மணிக்கு ஆழ்கடலுக்குச் சென்று, இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என்பது விதிமுறையாகும். இந்த விதிமுறையை தளர்த்த வேண்டும் என விசைப்படகு உரிமையாளர்கள் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். மேலும், அரசு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி மீனவர்கள் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
சின்னமுட்டம் மீனவர்களுக்கு விரைவில் நற்செய்தி!- ராஜேந்திர பாலாஜி
கன்னியாகுமரி: சின்னமுட்டம் மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக, முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று குமரி வந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, முன்னாள் கன்னியாகுமரி துணைத் தலைவர் வின்ஸ்டன் தலைமையில் துறைமுக விசைப்படகு உரிமையாளர்கள், சங்கத் தலைவர் வானவில் சகாயம், நிர்வாகிகள், மீனவர்கள் ஆகியோர் கொண்ட குழு சந்தித்து இரவில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு அனுமதி அளித்தால் ஆழ்கடலில் சட்ட ஒழுங்கு பிரச்னை உருவாகும் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தெரிவித்தார்.
அப்போது மாநிலத்தில் உள்ள மற்ற துறைமுக மீனவர்கள் இரவில் தங்கி மீன்பிடிக்கும்போது, இங்குள்ள மீனவர்களுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது. காலநிலை உள்ளிட்ட பல காரணங்களால் மீன்வளம் குறைந்து வருவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகும். எனவே, இதுகுறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், இந்த விவகாரம் குறித்து முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் விசைப்படகு உரிமையாளர்களிடம் அமைச்சர் உறுதியளித்தார்.