திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மூன்று நாள் பயணமாக நேற்று (ஜன.18) கன்னியாகுமரி மாவட்டம் சென்றார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிலையில், இன்று (ஜன.19) காலை தோவாளை மலர் சந்தையை பார்வையிட்டார். தொடர்ந்து கன்னியாகுமரியில் படகு சவாரி செய்து கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் கனிமொழி தெரிவித்ததாவது, "மக்களின் வரிப்பணத்தில் அதிமுக அரசு தொடர்ந்து வெற்றி நடைபோடுகிறது என்ற பொய் பிரசாரத்தை முன்னெடுத்திருக்கின்றார்கள். எந்த விதத்தில் தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
எல்லா விதத்திலும் தமிழ்நாடு சரிந்து கொண்டே செல்கிறது. வேலைவாய்பு இல்லை, முதலீடுகளே இல்லை என்ற நிலைக்கு தான் அவர்கள் கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
முதியோர் உதவித்தொகை கூட தர பணம் இல்லை. இவ்வளவு பணம் செலவு செய்து விளம்பரம் செய்கின்றார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த ஒரு முடிவையும் எடுக்க டெல்லியில் கேட்க வேண்டிய நிலை உள்ளது. டெல்லியில் இருப்பவர்கள் தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறார்கள்.
திமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை அதிமுக ஆட்சியில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. போராட்டங்கள் நடத்திதான் மின் விளக்கை எரிய வைக்கும் சூழல் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் திருவள்ளுவர் சிலை மின்னொளியில் ஜொலிக்கும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பூ கட்டும் பெண்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும்' - கனிமொழி எம்.பி.,