கன்னியாகுமரி: இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் இந்த கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி தோவாளை தாலுகா மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு பகுதியைக் கொண்டது. அது மட்டுமல்லாமல் தேரூர், மருங்கூர், செண்பகராமன் புதூர், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம், தெங்கம்புதூர், பறக்கை, தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரம் ஆகிய முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது.
மேலும், பகவதி அம்மன் கோயில், தூய அலங்கார மாதா ஆலயம், சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகம், சுசீந்திரம் கோயில் உள்பட பல்வேறு கோயில்களும் இங்கு உள்ளன. அதேநேரம், சர்வதேச சுற்றுலாத் தலமாக குமரிக்கடல், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் வட்டக்கோட்டை போன்றவை விளங்குகின்றன.
மேலும், அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான ரப்பர் உள்பட கிராம்பு எஸ்டேட்களும் இந்தப் பகுதியில் உள்ளன. 2021ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி இந்த கன்னியாகுமரி சட்டமன்றத்தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 982 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 47 ஆயிரத்து 347 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 104 பேரும் உள்ளனர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலங்களாக பலரால் எழுப்பப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில், அதன் அமைப்பு நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.