கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த சரலூர் பகுதியில் நீலவேணி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூசாரி நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 17) இரவு பூஜை முடிந்து பின்னர் கோயில் நடையை அடைத்துச் சென்றார்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 18) காலை வந்து பார்த்த போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இக்கோயிலின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில், கதவின் பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். அங்கு நீலவேணி அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தாலியை கொள்ளையடித்ததோடு உண்டியலில் இருந்த பணத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த தகவலறிந்து ஊர் மக்கள் அனைவரும் கோயிலில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோட்டார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.