கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அருமனையில் பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணன் மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இந்தப் பகுதியில் பிரபலமான ஜெயசீலன், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இருவருக்கும் வாக்களித்து வெற்றிப்பெற செய்யுங்கள். இந்தக் கூட்டத்தை பார்க்கும்போது வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு கிடைத்திருக்கிறது.
இந்த இரண்டு வேட்பாளர்களையும் எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சி மனநிலை இழந்துவிட்டது. கேரளத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எதிர் எதிர் அணியில் போட்டியிடுகிறார்கள். ஆனால் அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கைகுலுக்கி கூட்டணி வைத்துள்ளார்கள்.
காங்கிரசும், திமுகவும் குடும்ப அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஊழலுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது காங்கிரஸ், திமுக கட்சிகள். 2ஜி என்பது மாறன் குடும்பம் இரண்டு தலைமுறையாக செய்த ஊழல். 3ஜி என்பது கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் செய்த ஊழல். 4ஜி என்பது நான்கு தலைமுறையாக நாட்டை சுரண்டும் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் செய்த ஊழல்.