கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் "வீட்டுக்கொரு தொழில் முனைவோர், கிராமத்திற்கு ஒரு ஆடிட்டர் " கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதியாக தளவாய் சுந்தரம், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர், எம்.சி.சம்பத், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறு - அமைச்சர் எம்.சி சம்பத்
கன்னியாகுமரி: மத்திய அரசின் நடவடிக்கையால்தான் இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறான கருத்து என தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.
பின்னர் அமைச்சர் எம்.சி சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி குறித்து மாதம்தோறும் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. உலக அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதால் மத்திய அரசின் நடவடிக்கையால்தான் இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறான கருத்து. உலக முதலீட்டாளர் மாநாட்டால் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், மூன்று லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடுகளும், தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம், 41 முதலீட்டாளர்கள் மூலம் 8 ஆயிரத்து 435 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தொழில் வளர்ச்சி குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கு விண்ணப்பித்த 20 நாட்களில் தொழில் தொடங்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஏற்படுத்தி தருகிறது. மேலும், ஒவ்வொரு கல்வியாண்டிலும் தமிழ்நாட்டில் படித்து முடித்து வெளியே வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் அரசு நடவடிக்கை எடுக்கிறது” என்றார்.