கன்னியாகுமரி மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 650க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடிக்கச் சென்று நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவதாக அறிகிறோம். ஆனால், ஈரான் நாட்டில் இருக்கும் மீனவர்களை குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரும்போது அவர்களை தனிமைப்படுத்தி பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகள் எதையும் தமிழ்நாடு அரசு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
இதனால், தமிழ்நாடு மீனவர்களை கொண்டு வருவதில் சிக்கல் உள்ளதாக ஈரான் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அங்குள்ள தமிழ்நாடு மீனவர்களிடம் தெரிவித்துள்ளது. எனவே ஈரான் நாட்டில் உள்ள இந்திய மீனவர்களை முதல்கட்டமாக இந்தியாவிற்கு அழைத்து வரும்போது, தமிழ்நாடு மீனவர்கள் அனுப்ப மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.