தமிழ்நாட்டில் கரோனா அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் நோய் பாதிப்பைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜோதி நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னதாக குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று (ஏப்.12) ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 107ஆக உயர்ந்தது. சுமார் ஏழு மாதங்களுக்கு பின், பாதிப்பு எண்ணிக்கை நூறைக் கடந்துள்ளது குமரி மாவட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் அதிகபட்சமாக 31 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 13 பேர், கிள்ளியூரில் 2 பேர், குருந்தன் கோட்டில் 11 பேர் மேல்புறத்தில் 4 பேர், முஞ் சிறையில் 5 பேர் ராஜாக்க மங்கலத்தில் 10 பேர், திரு வட்டார் ஒன்றியத்தில் 9 பேர், தோவாளையில் 4 பேர், தக்கலை ஒன்றியத்தில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர கேரளாவில் இருந்து வந்த மூன்று பேருக்கும், ஜார்க்கண்ட்டிலிருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் தங்கி சிகிச்சைப் பெறவும் சிலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.