கன்னியாகுமரி: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் இரண்டு வாரம் இருக்கும் நிலையில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்றது. 78 பள்ளிகளைச் சேர்ந்த 396 வாகனங்களை, மாவட்ட ஆட்சியர், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு கல்வி நிறுவன வாகன விதிகள் சட்டத்தை அமல்படுத்தியது . அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தங்கள் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் கல்வி நிறுவனங்கள் தங்களது வாகனங்களை முறையாகப் பராமரிக்காமல் இருப்பதும், அந்த வாகனங்களில் அதிகளவில் மாணவர்களை ஏற்றுவதும், வாகனங்களில் மாணவர்களை கண்காணிக்கப் போதிய நடத்துநர்கள் இல்லாமல்
கல்வி நிறுவனங்கள் வாகனங்களை இயக்கி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக, ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முன், அனைத்து பள்ளி வாகனங்களையும் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். பள்ளி மாணவ - மாணவிகள் பேருந்துகள் அல்லது வாகனங்களில் ஏறி இறங்க தரையில் இருந்து பள்ளி வாகன படிக்கட்டுகள் 300 மில்லி மீட்டருக்கு அமைக்க வேண்டும் கதவுகளில் உறுதித் தன்மை இருக்க வேண்டும்; ஏறுவதற்கு வசதியாக கைப்பிடி அமைத்திருக்க வேண்டும் வாகனங்களில் அவசர வழி, வாகனத்தின் வலது பக்கத்தில் அமைத்து இருக்க வேண்டும்.
முதலுதவிப் பெட்டிகள் அனைத்து பள்ளி வாகனத்திலும் இருக்க வேண்டும் எனப் பல்வேறு கட்டுப்பாடுகளில் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது, ’’நமது மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளி வாகனங்கள் மாவட்ட அளவிலான ஒரு சிறப்பு குழு மூலம் ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் இன்று (மே 17ஆம் தேதி) காவல்துறை போக்குவரத்து துறை உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், 78 பள்ளிகளில் உள்ள மொத்தம் 396 வாகனங்களை இன்று ஆய்வு செய்துள்ளனர். ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும், ஒரு வழி தான் இருக்க வேண்டும். CCTV பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். மேலும்
2012ஆம் ஆண்டின் கல்வி நிறுவன வாகனங்கள் பொதுச் சாலையில் இயங்குவது குறித்த விதிமுறைகளின்படி இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது’ என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வராத பள்ளி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், அதிக வேகமாகவும், கைபேசி பேசிக் கொண்டும் வாகனங்களை இயக்குவது உள்ளிட்டவைகள் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி குற்றமாகும். இதுகுறித்து பொதுமக்கள் புகார் மற்றும் தகவல் தெரிவிப்பதற்காக பள்ளி வாகனத்தின் பின்புறத்தில் பள்ளியின் தொடர்பு எண் மற்றும் பள்ளிக்குட்பட்ட காவல் நிலைய எண், வட்டாரப் போக்குவரத்து அலுவலக எண் ஆகியவற்றை கண்டிப்பாக எழுதி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளதுடன் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மூலம் வாகன ஓட்டுநர்களுக்கு, வாகனம் தீப்பிடித்தால் அதனை அணைப்பது எப்படி என்கின்ற செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதியத் திட்டம் - முதலமைச்சர் மீது நம்பிக்கை உள்ளது : தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம்