கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவன் செபிலோன் தாஸ். நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவனுக்கு இன்று ஆங்கில தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவன் செபிலோன் தாஸ், தன்னை இரண்டு பேர் டெம்போவில் கடத்திச் சென்றுவிட்டதாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்ததாகவும் ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து ஆசிரியர்கள் அளித்த தகவலின் பேரில் நேசமணி நகர் காவல் துறையினர் பள்ளிக்கு வந்து மாணவனிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், மாணவன் விடுதிப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு பேர் அவனை அழைத்ததாகவும், அருகில் சென்றபோது அவனை சாக்கு மூட்டையில் அடைத்து கட்டித் தூக்கிச் சென்றுவிட்டதாகவும், நாகர்கோவில் பால் பண்ணை அருகே டெம்போ நிற்கும்போது அங்கிருந்து இறங்கி தப்பி ஓடி வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.