கன்னியாகுமரி:தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவலில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நீர் வரைபட செயலி அறிமுக விழாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய, மத்திய அரசு தடை விதித்துள்ளது குறித்த கேள்விக்கு, “மாநிலத்தின் அதிகாரங்களைப் பிடுங்கி மாநில சுயாட்சி தத்துவத்திற்கு எதிராக, மத்தியில் அதிகார குவியல் இருப்பதால், பல வழிகளில் மாநில உரிமையைப் பறிக்க முயற்சி செய்து வருகிறது, மத்திய அரசு. இதை திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
மாநிலங்களுக்கான அதிகாரத்தை அதிகமாக வழங்க வேண்டும் என்பது அனைத்து மாநிலங்களின் கோரிக்கை. இதனை மீறும் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேசி இதற்கான முழுமையான நடவடிக்கை மேற்கொள்வோம். தமிழ்நாட்டில் வால், மூக்கு, தலையை நுழைப்பேன் என்று தமிழிசை கூறுகிறார்.
நாங்கள் கூறுவது உடலையே நுழையுங்கள், ஆனால் இது எதுவும் எடுபடாது. அவர்களது சங்கம் கலைந்து கொண்டு இருக்கிறது. அந்த விரக்தியின் வெளிப்பாடாக பார்க்கிறேன். அன்பு, அரண் என்ற சொல்லுக்கு நேர் எதிர்மறை சொல்லான வெறுப்பு என்பதை பேசுகின்றவர்கள், பாஜகவினர். ஆன்மிகத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை.
மாற்று மதங்களை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தும் செயல் ஆன்மிகம் ஆகாது. ஆளுநர் பதவி வேண்டுமா வேண்டாமா என்னும் சர்ச்சை நடந்து வருகிறது. எப்போதுமே ஆளுநர் பதவி தலைவலியாக இருந்து வருகிறது.
பன்வாரிலால் தலைமையில் அப்போதைய ஆட்சியில் துணைவேந்தர்கள் பதவி வழங்கப்பட்டது. சாத்தான் வேதம் ஓதுவது போன்று அவர் தற்போது பேசுகிறார்.
அவரது பதவிக்காலத்தில் அப்போதைய அரசுக்கு வக்காலத்து வாங்கும் பணியை செய்தார். பொய் மூட்டையில் சவாரி செய்பவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர், திமுகவை எந்த பொய்யினாலும் தகர்க்க முடியாது” என்றார்.
பொய் மூட்டையில் சவாரி செய்பவர்கள் பாஜகவினர் - அமைச்சர் மனோ தங்கராஜ் இதையும் படிங்க: தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தீபாவளி வாழ்த்து