நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, முப்படைகள் ஒன்றுசேர்ந்து பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவி மரியாதை செய்யப்படும் என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இன்று டெல்லி, பெங்களூர், சென்னை உட்பட பல பகுதிகளில் மருத்துவமனைகளிலும், கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடும் காவல்துறையினரின் சேவையைப் போற்றும் விதமாக, அங்கிருக்கும் காவல் துறை போர் நினைவிடத்தில் ராணுவ போர் விமானம் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அந்தவரிசையில்,இந்தியாவின் தென் கோடி எல்லையான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு மேலாக இரண்டு விமானங்கள் ஒரு முறை தாழ்வாக வட்டமிட்டு பறந்தன.