கன்னியாகுமரி:கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது 350 ரூபாயாக இருந்த பிச்சி பூ, இன்று 1250 ரூபாயாகவும், மல்லிகை பூ 550 என்ற அளவில் இருந்து, 1000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை, காலம் காலமாக அம்மாநில மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையின் முக்கிய பகுதியாக, மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்க வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்தும், ஊஞ்சல் ஆடியும் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் வைத்து மிக சிறப்பான முறையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரள மக்களின் வசந்த விழா என்று அழைக்கப்படும் ஒணம் பண்டிகை கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. 10 நாள் விழாவில் இன்று நான்காவது நாள் ஓணத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில், பூக்களின் விற்பனை களைகட்ட துவங்கி உள்ளது. பண்டிகையையொட்டி கடந்த 20 ஆம் தேதியில் இருந்து, கேரளா மக்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு வருவதால், பூக்களை வாங்க கேரள வியாபாரிகளும், பொதுமக்களும் தோவாளை பூச்சந்தையில் அதிகளவில் குவிந்துள்ளனர்.