கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிக அளவிலான ரேசன் அரிசிகள் கேரளாவுக்கு கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்துவருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட அளவில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. எனினும், அலுவலர்களின் கண்ணில் மண்ணை தூவிக்கொண்டு ஒரு சில கடத்தல் கும்பல்கள் அரிசிகளை கடத்திவருகின்றனர்.
அதன்படி, நேற்றிரவு (அக். 17) புதுக்கோட்டையிலிருந்து நடைக்காவு வழியாக சொகுசு காரில் ரேசன் அரிசி கடத்தப்படுதாக நித்திரவிளை காவல் நிலைய காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்பிரிவு காவல் துறையினருடன் காவல்நிலைய ஏட்டு ஒருவருமாக நடைக்காவு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சொகுசு வாகனம் ஒன்று வந்தது. அதைக் கண்ட காவல் துறையினர் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பொதுமக்களுக்கு அரசால் விநியோகிக்கக்கூடிய ஒன்றரை டன் ரேசன் அரிசி சிறு சிறு சாக்கு மூடைகளில் பதுக்கிவைத்திருந்து, கேரளாவுக்கு கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் அந்த வாகனத்தை அரிசியுடன் பறிமுதல்செய்தனர். மேலும், அந்த வாகனத்தை ஓட்டிவந்த மார்த்தாண்டம் அருகே நல்லூர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (49) என்பவரை கைதுசெய்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க...புதிதாகப் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு