கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதானமான விவசாயமாக தென்னை, ரப்பர், வாழை, நெல் ஆகியன பயிரிடப்படுகின்றன. அதிலும் முகிலன் குடியிருப்பு, தென்தாமரை குளம், ஈத்தாமொழி, மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகப்படியாக செய்யப்பட்டு வருகிறது. தென்னை விவசாயத்தின் ஒரு பகுதியாக தும்பு ஆலைகள் இயங்குகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 250க்கும் மேற்பட்ட தும்பு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தென்னை விவசாயம் பாதிப்படையாமல் இருக்க தும்பு ஆலைகளை திறக்க கோரிக்கை! இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆலைகள் இயங்காமல் இருப்பதால் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்து வாழ்வாதாரம் ஏதுமின்றி உள்ளனர்.
அதுமட்டுமன்றி தும்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் தேங்காய் கதம்பல்கள் டன் கணக்கில் வீணாகின்றன. இதனால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் நலன் கருதியும் தென்னை விவசாயம் பாதிப்பு அடையாமல் இருக்கவும் தும்பு ஆலைகளை சில நிபந்தனைகளுடன் மே 3ஆம் தேதிக்கு பின் இயக்க அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு யோகாசனப் பயிற்சி.!