தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயிலுக்குள் நுழைய தனி ஒரு குடும்பத்திற்கு அனுமதி மறுப்பு!

நாகர்கோவில்: அழகியபாண்டியபுரம் அருகே கோயிலுக்குள் ஒரு குடும்பத்தாரை அறநிலையத் துறை உள்ளே அனுமதிப்பதில்லை என்று கூறி அவர்கள் அறநிலையத் துறை அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

in-kanyakumari-hindu-religious-and-charitable-endowments-department-restricted-a-family-to-enter-a-temple
கோயிலுக்குள் நுழைய தனி ஒரு குடும்பத்திற்கு அனுமதி மறுப்பு!

By

Published : Jan 24, 2020, 9:06 AM IST

குமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் அருகே அருள்மிகு மாடசுவாமி கோயில் உள்ளது. இது தனியார் குடும்ப கோயிலாக இருந்துவந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை இக்கோயிலை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.

இந்த நிலையில் அழகியபாண்டியபுரம் வணிகர் தெருவைச் சேர்ந்த வள்ளியம்மாளுடன் அவர் குடும்பத்தினர் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருகிலுள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அவர்கள் கூறுகையில், அழகியபாண்டியபுரம் அருள்மிகு மாட சுவாமி கோயில் தங்கள் குடும்ப கோயிலாக இருந்ததை அறநிலையத் துறை கைப்பற்றியது. இந்தக் கோயில் தற்போது மீண்டும் சில தனிநபர்களின் கையில் சிக்கியுள்ளது.

மேலும் அவர்கள் பரம்பரையாக நடத்திவந்த கோயிலுக்குள் தங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். இதனால் பூஜை உள்ளிட்ட காரியங்களில் நாங்கள் வெளியேயிருந்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறினர்.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் யார் வேண்டுமானாலும் தரிசிக்கலாம். ஆனால் தங்கள் குடும்பத்தாரை மட்டும் உள்ளே அனுமதிக்காதது வேதனையளிப்பதாகவும், எனவே கோயிலில் அனைவரையும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த கோட்டார் காவல் துறையினர் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

அறநிலையத் துறை அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பம்

இதையும் படியுங்க: திருப்பரங்குன்றம் கோயில் காணிக்கை வசூல் ரூ.31 லட்சத்தை எட்டியது

ABOUT THE AUTHOR

...view details