முயல் வேட்டையாடியவர்கள் கைது : ஒன்பது நாய்கள் பறிமுதல் - nagarkovil
கன்னியாகுமரி: நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டியில் முயல் வேட்டையாடிய மூன்று நபர்களை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ஒன்பது வேட்டை நாய்களை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டும் சோதனை சாவடிகள் அமைத்தும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி குமாரபுரம் வனப்பகுதியில் வேட்டை நாய்களை வைத்து ஒரு கும்பல் முயல் வேட்டையில் ஈடுபட்டபோது அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன் தலைமையில் வன ஊழியர்கள் முயல் வேட்டையில் ஈடுபட்ட ஆவரை குளம் பகுதியைச் சேர்ந்த இந்திரன், ராமகிருஷ்ணன், கேசவன் ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்ட நாய்களை பறிமுதல் செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.