கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை அருகே ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் 46 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்குமேல் வசித்துவருகின்றனர். நூற்றாண்டு பழமைவாய்ந்த பேச்சிப்பாறை அணையின் விரிவாக்கம், பராமரிப்புப் பணிகள் 61 கோடியே 30 லட்சம் செலவில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவருகிறது.
அணையிலிருந்து உபரி நீர் வெளியேற கூடுதலாக புதியதாக கட்டப்பட்டுள்ள மதகுப் பகுதியில் அமைந்துள்ள 46 வீடுகளை இடிக்க வருவாய்த் துறை சார்பில் கடந்த ஓராண்டுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மாற்று இடத்தில் வீடுகள் கட்டித் தர வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
போராட்டத்தின் விளைவாக மாற்று இடத்தில் வீடுகட்டி கொடுத்த பிறகுதான் தற்போது இருக்கும் வீடு இடிக்கப்படும் என்று அரசு அலுவலர்கள் உத்தரவாதம் அளித்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உபரி நீர் வெளியேறும் பகுதியில் உள்ள எட்டு வீடுகளை மட்மே இடித்து மாற்று இடத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என்றும் பாதிப்பில்லாத மற்ற பகுதிகளில் உள்ள வீடுகளை இடிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.