வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களைத் தங்கவைத்த தனியார் விடுதிக்குச் சீல்! - விடுதிக்கு சீல் வைத்த அலுவலர்கள்
கன்னியாகுமரி: சென்னையிலிருந்து வந்தவர்களைத் தங்கவைத்த தனியார் விடுதிக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுவரையிலும் 84 பேர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று ( ஜூன் 19) இரவு நாகர்கோவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சென்னையிலிருந்து காரில் வந்த இரண்டு நபர்கள் வருவாய்த் துறை அலுவலர்ளுடைய சிபாரிசின் பேரில் தங்கவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே தனியார் விடுதிகளில் யாரையும் தங்கவைக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை மீறி இருவர் விடுதிகளில் தங்க வைக்கப்பட்ட தகவல் காவல் துறையினருக்குக் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த அறையில் ஒரு ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலர், சென்னையிலிருந்து வந்த 2 பேர், வருவாய்த் துறை அலுவலர்கள் ஆகியோர் தங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலர்கள் விதிமுறைகளை மீறி வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களைத் தங்க வைத்ததால் அந்த விடுதிக்குச் சீல் வைத்தனர்.